Friday, June 21, 2013

அணி மாறுவது பச்சோந்தித் தனம் இல்லையா? மாநிலங்களவைத் தேர்தலும் மமகவின் முடிவும் !

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 27 ம் தேதி நடைபெற உள்ளதால் இதற்காக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாலும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 7 பேர் போட்டியிடும் சூழலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 4 பேரும் அதிமுக மார்க்சிஸ்ட் ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யுனிஸ்டு வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெறுவது நிச்சயம் எனும் நிலையில் மீதியுள்ள ஒரு இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் போட்டியிடுகின்ற சூழலில் மமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன! அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மமக தற்போது திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆத்ரவளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ஏன் இந்த நிலைப்பாடு சற்று ஆய்வு செய்து பார்த்தோமானால் மமகவின் இந்த முடிவு எதனால் என்பது விளங்கும்!









கடந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதற்காக மமக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளால் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை ஏற்று ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆட்சி அமைந்தால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தார் ! தேர்தல் முடிந்து முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மிருகபலத்துடன் ஆட்சியைப் பிடித்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கூட்டணிக் கட்சிகளை மதியாமல் ஆணவப் போக்குடன் நடந்து கொண்டார். முஸ்லிம் அமைப்புகளை மதியாமல் நடந்ததுடன் முஸ்லிம்களின் வெறுப்புக்கும் ஆளானார்.


முதலாவதாக முஸ்லிம்களின் வாக்குக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மோடியை தன பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது முகம் சுளிக்க வைத்தது ! கூட்டணி வெற்றிபெறப் பாடுபட்ட மமக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தாலும் மோடி வரவேண்டும் என வரவேற்று மகிழ்ந்தார். அது மட்டுமல்லாமல் வேதம் ஓதும் சாத்தனுக்கு வெண்சாமரம் வீசுவது போல் மோடியின் அமைதி [?!} யாத்திரைக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.இருப்பினும் மமக பொறுமையுடன் கூட்டணியில் நீடித்தது!

இரண்டாவதாக வந்த உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என ஆணவப் போக்குடன் அறிவித்து அராஜக வழியில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றினர்.இப்போதும் மமக இன்னும் காலமிருக்கிறது என பொறுமையுடன் கூட்டணியில் நீடித்தது!


மூன்றாவதாக வக்பு சொத்துக்களை மீட்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதற்கென ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை! திமுகவினரிடம் இருந்து சொத்தை மீட்க நில அபகரிப்பு வழக்குகள் தொடுத்து எடுத்த நடவடிக்கையிலும், சசிகலா வகையறாக்களிடம் உள்ள தன சொத்துக்களை மீட்பதிலும் காட்டிய அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு வக்பு சொத்துக்களை மீட்பதில் காட்டி இருந்தால் பலநூறு கோடி சமுதாய சொத்துக்கள் மீட்கபட்டிருக்கும்! ஆனால் வக்பு வாரிய உறுப்பினர்களை நியமிப்பதிலும் உரியமுறையைக் கடைப்பிடிக்காமல் ,சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ளாததால் மமக நீதிமன்றம் சென்று உரிமையை மீட்டு வந்தது!

நான்காவதாக கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்திலே உள்ள முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு முரணான பிரிவுகளை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதை நீக்காததோடு மட்டுமல்லாமல், எதற்காக இந்தத் சட்டத்தை இஸ்லாமிய சமுதாயம் எதிர்த்ததோ அதை சமாக நலத்துறை மூலம் நடத்தி குழந்தைத் திருமணம் எனக் கூறி இஸ்லாமியத் திருமணங்களை தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் கைது செய்தார் ! இதற்கு எதிராக கூட்டமைப்பு களமிறங்கி பெரம்பலூரில் பிரம்மாண்டமான ஆர்பாட்டம் நடத்தியும் இன்று வரை இது தொடர்கிறது !

ஐந்தாவதாக கடந்த கலைஞர் ஆட்சியில் முஸ்லிம்கள் போராடிப் பெற்ற 3.5% இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதோடு அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்வேன் எனும் வாக்குறுதி பலமுறை மமக உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டும் பலனில்லை என்றதால் ஜூலை 6 கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி எனும் மக்கள் மன்றத்திற்கு செல்லும் நிலைக்கு மமக தள்ளப்பட்டது!

ஆறாவதாக பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு அண்ணா பிறந்த நாளில் விடுதலை வழங்க வேண்டும் குறைந்த பட்சம் ஜாமினாவது வழங்க வேண்டும் என சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை குரல் எழுப்பியும் பல முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத ஜெயலலிதா அரசு 'குதிரை குப்புறத் தள்ளி குழியும் பறித்தது' என்பது போல் சிறைவாசிகளின் வழக்குகளை கவனித்து வந்த கிச்சான் புஹாரி உள்ளிட்ட சகோதரர்களையும் கர்னாடக அரசுடன் சேர்ந்து கைது செய்து சித்தரவதை செய்து கொடுமைக்கு உள்ளாக்க துணை புரிந்திருக்கிறது!

மேலும் தொகுதிப் பிரச்சனைகளுக்க்காகவோ, சமுதாயப் பிரச்சனைகளுக்க்காகவோ மமக உறுப்பினர்கள் சந்திக்க முடியாத முதல்வரால் தேமுதிக அதிருதி உறுப்பினர்களை மட்டும் உடனடியாக சந்திக்க முடிகிறது என்றால முஸ்லிம்கள் கருவேப்பிலைகளா?

இவ்வளவுக்கும் பிறகு இன்னும் காலம் இருக்கிறது பொறுமையுடன் இருந்து கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று இருந்தால் சமிபத்தில் டெல்லிக்கு சென்றவர் நரேந்திரமோடி எனது நண்பர் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தேடுக்கப்பட்ட்டிருபது எனக்கு மகிழ்ச்சி ! அவர் ஒரு சிறந்த நிர்வாகி என ஏற்கனவே எரிகின்ற முஸ்லிம்களின் கொதிப்பில் எண்ணெய் வார்த்து விட்டு வந்துள்ளார் !

அது மட்டுமல்லாமல் தில்லி பத்திரிக்கையாளர் சந்த்ப்பில் 'பாராளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை 40 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும்' என்று கூட்டணிக் கட்சிகளை துச்சமாக தூக்கி எறிந்து கதவை சாத்திய பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் மமகவின் மதிப்பு மிக்க 2 வாக்கை பெற கருணாநிதி கதவை திறந்து அழைக்கும் நிலையில் மமகவின் இந்த முடிவில் தவறென்ன இருக்கிறது! தன் கட்சி உறுப்பினர்களையே காக்க முடியாத தேமுதிகவுக்கு வாக்களித்து வீணாக்குவதா? மோடியின் தோழிக்கு முஸ்லிகளின் எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை கைவிடலாமா? ஆகையால் மமகவின் இந்த முடிவு சாதுர்யமான முடிவாகவே அரசியல் அரங்கில் பார்க்கப் படுகிறது!

ஆனால் இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சிலர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசுவது வியப்பளிக்கிறது! மமக சும்மா இருந்திருந்தால் மானத்தை இழந்து ஜெயலலிதா காலில் கிடப்பதா? நிதிஷ் குமாருக்கு உள்ள ரோஷம் உங்களுக்க வராததேன்? என இவர்கள் தான் இரண்டு நாளைக்கு முன்னால் பேசினார்கள்! இப்போ அதே வாய்கள் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்று கருணாதிக்கு வாக்களிப்பது துரோகம் என்று கூறுகின்றனர். அப்படியானால் முஸ்லிம்களின் வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மமக எதிர்த்தும் மோடியை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது மட்டும் துரோகம் இல்லையா !

மமக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதிமுகவினால் தான் என்பவர்கள் 231 தொகுதிகளிலும் மமக தொண்டன் மாடாக உழைத்து கூட்டணி வெற்றிக்கு பாடு பட்டதை எந்தக் கணக்கில் வைப்பது?

மேலும் 2G புகழ் கனிமொழியை ஆதரித்து வாக்களிப்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கில்லையா?
என்கின்றனர் ஜெயலலிதாவுக்கு அளித்த வாக்கு மட்டும் என்னவாம் ? அவர் 2G என்றால் இவர் டான்சி இருவரும் சிறை சென்றவர்கள் ! அந்த வழக்கை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் பார்த்துக் கொள்ளட்டும்! ஊழலை அளவுகோலாக எடுத்து எந்த முஸ்லிம் அமைப்பும் யாரையும் ஆதரிப்பதில்லை ! சமுதாயத்திர்கான கோரிக்கைகளை முன் வைத்துதான் நாம் அரசியல் ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறோம் !

மேலும் பணம் கை மாறி இருக்கலாம் அதனால் தான் இவர்கள் மாறினார்கள் எனக் கூறுகிறார்கள்! இன்றைய அரசியல் சூழலில் இப்படிக் கேள்வி எழுவது இயற்கை !
ஆனால் யூகங்கள் பெரும்பாலும் பொய்யாகும் அது பாவமாகும் என்று இஸ்லாம் கூறுகிறது! சொல்பவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும் ! முடியவில்லை என்றால்
' யா அல்லாஹ் சமுதாய நலனைப் புறக்கணித்து சுயநலத்திற்காக பணத்துக்காக மமக தலைமை இந்த முடிவை எடுத்திருந்தால் அவர்களை நாசமாக்கு ! இல்லை என்றால் இது போன்ற பொய்யான அவதூறுகளை பரப்புவோரை நாசமாக்கு! என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்!

அடுத்ததாக அணி மாறுவது பச்சோந்தித் தனம் என்கிறார்கள் ! அரசியலை அரசியலாகப் பாருங்கள்! அணி மாறும் இந்தப் பச்சோந்தி தனத்தை செய்யாத அமைப்பு இங்கு ஏதாவது உண்டா ? நாங்கள் 50 ஆண்டு காலமாக ஒரே அணியில் உள்ளோம் எனும் ஒரு அமைப்பைக் காட்டுங்கள்! அமைப்பை விடுங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மை மக்களும் மாற்றி மாற்றித தானே வாக்களிக்கிறோம் ! அப்படியானால் மக்களும் பச்சோந்திகளா? இத்தனை நாள் நம் முதுகில் சவாரி செய்தார்கள் கொஞ்ச காலம் நாம் சவாரி செய்வோமே !

ஆகையால் மமகவின் இந்த முடிவை சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள் வரவேற்கவே செய்கிறார்கள் ! அரசியல் நோக்கர்களும் மமகவின் இந்த முடிவை முதிர்சியான முடிவாகவே பார்க்கிறார்கள் ! வேறு எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு செயல் பட்டால் அல்லாஹ நிச்சயம் வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ் !

சமுதாய அக்கறையுடன்
-செங்கிஸ் கான்

அத்வானிக்கும், மோடிக்கும் என்ன வித்தியாசம்?

பிரதமர் வேட்பாளருக்கான பதவி நரேந்திரமோடிக்கே அளிக்கப்படும் என்பது கடந்த மார்ச் மாதம் நடந்த பா.ஜ.கவின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட உறுதிச்செய்யப்பட்டது. கோவாவில் நேற்று முடிவடைந்த பா.ஜ.கவின் 2 தினங்கள் கொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரச்சாரக்குழுவின் தலைவராக மோடி இருப்பார் என்று அறிவித்ததோடு  ஊடகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.


பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் இணைந்து சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் மோடிக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்புக்குரல்கள் அடங்கிப்போனாலும், அவற்றை வலுவிழக்கச் செய்து தற்போதைய கட்சியின் தீர்மானத்தில் உண்மையான வெற்றியை ஈட்டியது ஆர்.எஸ்.எஸ் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து மோடியின் பெயர் இடம்பெறவேண்டும் என்ற தந்திரமே தவிர வேறொன்றுமில்லை என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மோடிக்கு மதச்சார்பற்ற இமேஜ் கிடையாது என்பதால் அத்வானியும் அவரது சகாக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பா.ஜ.கவின் தேசிய தலைமையிலும், பல மாநிலங்களின் தலைமை பொறுப்புகளிலும் வெட்ட வெளிச்சமான பதவிக்கான நாற்காலிச் சண்டையும், அதிகார மோகமுமே காரணம் ஆகும்.
இந்திய அரசியலில் பா.ஜ.கவுக்கு வளர்ச்சியை உருவாக்கியது அத்வானி நடத்திய ரதயாத்திரை அல்லவா? தீவிர ஹிந்துத்துவாவின் முகமூடியாக அத்வானி இருந்தபோது, வாஜ்பாய் மிதவாத முகமூடியாக அடையாளம் காட்டப்பட்டார்.அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு சமமானது. சிறுபான்மை விரோதமும், வன்முறைகலந்த தீவிர தேசியவாதமும், வகுப்பு வாதமும் கொள்கையாக கொண்ட கட்சியால் மதசார்பற்ற முகமூடியை அணிந்து வெகுதூரம் பயணிக்க இயலாது என்பதை பா.ஜ.க புரிந்துகொண்டது. ஆகையால் அத்வானியை விட தீவிர ஹிந்துத்துவா கொள்கையில் அதிக ரேட்டிங்கை கொண்ட மோடி என்ற தீவிரவாத ஹிந்துவை தோளில் சுமக்க தீர்மானிக்கப்பட்டது.
நிதீஷ்குமாரின் எதிர்ப்புகள், மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மாயா கோட்னானிக்கு கிடைத்த ஆயுள் தண்டனை, தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்துவருவது உள்ளிட்ட எதிர்ப்பு சூழல்களை முறியடிக்க மோடியின் தீவிரவாத ஹிந்துத்துவா இமேஜில் அபயம் தேடியுள்ளது பா.ஜ.க.இதற்கு 3-வது தடவையாக குஜராத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு கிடைத்த தொடர் வெற்றியும், அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் மோடிக்கு சாதகமாக மாறின. யாருடைய மதசார்பற்ற சான்றிதழும் தேவையில்லை. கட்சியில் மதசார்பற்றவர், மதவாதி என்ற பிரிவினை கிடையாது’ என்று பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் ஹுஸைன் கூறியுள்ளார்.
இதிலிருந்து அத்வானியை விட மோடி மதசார்பற்றவர் என்பதையும், மோடியை விட அத்வானி தீவிர ஹிந்துத்துவா வாதி என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைத்தான் நாட்டு மக்களுக்கு பா.ஜ.க அளிக்கும் விளக்கமாகும்.
அ.செய்யது அலீ.
Source at: http://www.thoothuonline.com/அத்வானிக்கும்-மோடிக்கும/

Friday, March 8, 2013

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்





மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி:
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.
சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர்.
உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.
குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)





source : tmmk.in 

தமிழ்நாடு சர்வோதய மண்டல் அகில இந்திய மதுவிலக்குக் கவுன்சில் கூட்டம் சார்பாக சென்னையில் மதுவிலக்கு மாநாடு




தமிழ்நாடு சர்வோதய மண்டல் அகில இந்திய மதுவிலக்குக் கவுன்சில் கூட்டம் சார்பாக சென்னையில் 2.03.2013 அன்று மதுவிலக்கு மாநாடு நடைபெற்றது. மக்கள் நலனைப் பேணக்கூடிய அரசு, வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மதுவிலக்கை அமுல்படுத்தாது மதுவிற்பனையில் ஈடுபடுவது சரியான பொருளாதார நடவடிக்கையாக இருக்காது வலமான வ-மையான தமிழ்நாடு அமைய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடைபெற்ற இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்..எச்.ஜவாஹிருல்லா, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் மரு. ராமதாஸ், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தன், மதிமுக மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கௌதம சன்னா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பல்வேறு மாநிலங்களில் மது விலக்குக்கான போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.






Source : tmmk.in


சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே


சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே


சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.
தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின் பரிதாப நிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.
இப்போது என் கதியும் அதே நிலைதான்.விசயத்திற்கு வருகிறேன்,
நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காக நமது இகாமாவில் ( STC,ZAIN,MOBILY )போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக பயன்படுத்தி வருகிறோம்.
நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.
இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும் பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பலியாகி விடுகிறோம்.
இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர் நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு பில் பாக்கி வைத்து விட்டதால்,
யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோ அவர் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.
அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ் சகோதரர்.
நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.
இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
தற்போது எனது இகாமாவில் எனக்கே தெரியாமல் 9 சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன் படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.
உடனடியாக STC தலைமை அலுவலகம் சென்று புகார் செய்து விட்டேன்.
அவர்களும் எனது புகாரை பதிவு செய்து விட்டு 24 மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை போல் உணர்கிறேன்.
இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு சிம்கார்டு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக் கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள் 902 என்ற எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.
STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே உங்களது இகாமாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்

source:tmmk.in

Thursday, March 7, 2013

சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்



சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்




காந்திய வாதி சசி பெருமாள்; உண்ணாவிரத்தை கெடுக்கும் நோக்கோடு காவல் துறை அவரை வலுக்கட்டாயமாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளது.  இந்தஅத்து மீறல் வன்மையாக  கண்டிக்கத்தக்கது   இது தொடர்பாக மம க   தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்  இருந்துவரும் காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை காவல்துரையினர் அத்துமீரலுடன் அவரது உண்ணாவிரதத்தை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டது வன்மையாக கண்டிகத்தகது,
33நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலிவுற்ற பெரியவர் சசிபெருமாலை காப்பாற்றும் நோக்கம் உண்மையிலேயே அரசுக்கு இருந்து இருந்தால் அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்று அவரை இணங்க செய்திருக்கவேண்டும் . அதை விடுத்து பலபிரயோகம் செய்தமை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  கொண்டு வர  அணு தினமும்  பாடுபடும்  மனித நேய மக்கள் கட்சி  சசி பெருமாளின் முயற்சிகளுக்கு என்றும் பெறும் துணையாக இருக்கும்    என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் அரசு சசிபெருமாளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்றும் கேட்டுக்கொள்கிறோம்
ஜே எஸ் ரிபாயி

தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்






மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே போராடி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களும், தமிழகத்தில் ரயில்களும் ஓடாதவாறு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் மறைமுக ஆதரவளித்தார்.
அதேபோன்று, தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள், கடந்த 3.3.2013 அன்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியின் போது கோரிக்கை விடுத்தார்.
ஆகவே, அனைத்துலக தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழக அரசே கடையடைப்பு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
அன்புடன்
(பி.எம்.ஆர்.சம்சுதீன்)

Tuesday, March 5, 2013

ஜவாஹிருல்லாஹ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் விருது! - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை






தமிழகத்தில் உள்ள முன்னணி ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தெற்கு மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை (சி.பி.எம்.), பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜே. புஷ்பலீலா ஆல்பன் (தி.மு..), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (...) மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியராஜன் (தே.மு.தி..) ஆகியோர் பெற்றனர். இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொது செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆம், வரலாறு படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆறு அமைப்புகளின் ஊழல் எதிர்ப்பு போராளிகள், ஊழலுக்கு எதிரான நேர்த்தியான கூட்டணி அமைத்து, நான்கு நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகளும் வழங்கியுள்ளனர். சென்னை எதிராஜ் சாலையில் உள்ள பெண்களுக்கான எதிராஜ் கல்லூரியின் கேளரங்கில் - பரிசளிப்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 11, 2012 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. பெருந்திரளானவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 90 வயதை தாண்டிய - திருப்பூர் பஞ்சாயத் யூனியனின் முன்னாள் தலைவர் - திரு வி.பொன்னுலிங்கம் - இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இலக்கிய செல்வர் திரு குமரி அனந்தன் - நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மூன்று உறுப்பினர்களுக்கு பொன்னாடை போத்தி, நினைவு பரிசுகளையும் வழங்கினார். அவர் - தனது வாழ்த்துரையில் - நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை பற்றி குறிப்பிட்டார். இந்த கால அரசியல்வாதிகள் - காமராஜரின் வாழ்கையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் போல் வாழ முயற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
திரிபுரா மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் திரு பி.எஸ். ராகவன் IAS - ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் வடிவமைத்துள்ள பரிசளிப்பு திட்டத்தை மிகவும் பாராட்டி பேசி, இதனை நாட்டிலேயே ஒரு முன்னோடியான முயற்சி என கூறினார். ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முனைந்திடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்து கூறிய அவர், விருதுகளை வென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல் தெரிவித்தார்.
புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் மாலன் மற்றும் பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் - ஊழலையும், லஞ்சத்தையும் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாது என கூறி, அதை எதிர்த்து எதையும் செய்ய துணியாத பொது மக்களின் நிலைப்பாட்டை கண்டித்தனர். ஊழல் எதிர்ப்பு போராளிகளின் தற்போதைய முயற்சி மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விருதுகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் - தற்போது போல், எப்போதும் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்க முயற்சி செய்வோம் என்றும், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களாக தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும், இந்த விருதுகளுக்கு பின்னால் உள்ள நெறிகளை உயர்த்தி பிடிப்போம் என்றும் உறுதி கூறினர்.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொது செயலாளர் திரு எஸ்.எம். அரசு - தனது வரவேற்புரையில் மூன்று விசயங்களை - சம்மந்தப்பட்ட அனைவரின் பரிசீலனைக்கும் எடுத்து வைத்தார்.

1) மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் - நாட்டுக்கும், மக்களுக்கும் தன்னலமற்ற சேவை புரிய தியாகம் செய்யவேண்டிய துறையாகவே அரசியலை பார்க்க வேண்டும். பொருளாதார வசதிகளை தேடுவோர் அரசியலை தேர்வு செய்ய கூடாது. அதனை நாடுவோர் - அதற்கு என உள்ள பிற பாதைகளை தேடி கொள்ளட்டும்.
2) ஒதுங்கிவிட்டு, பின்னர் வெளியில் இருந்து புலம்பாமல், நல்ல, சரியான சிந்தனைக்கொண்ட, நேர்மையானவர்கள் - இந்த நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிட துணிந்து வரவேண்டும். தீயவர்களால் தீமை நடப்பதில்லை; தீயவர்கள் தீவிரமாக செயலாற்றும்போது, அதனை எதிர்த்து ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் (தீமை) நடக்கிறது.
3) நாட்டினர் முன் மிக கடினமான பணி உள்ளது. தங்களின் பிரதிநிதிகளாக செயல்பட நல்ல, நேர்மையானவர்களை அடையாளம் கண்டு, தேர்தலின் போது, அந்த நாட்டு பற்று மிக்கவர்களுக்கு - அவர் எந்த கட்சியினராக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், எந்த கொடியினை கொண்டவராக இருந்தாலும், எந்த சின்னத்தை கொண்டவராக இருந்தாலும் - அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதிநித்துவ மக்களாட்சியில் - ஊழலற்ற நிர்வாகத்தினை நடத்திட இந்த மூன்று கொள்கைகளும் மிகவும் அவசியம்.
நிகழ்ச்சியினை நெறிப்படுத்திய ஐந்தாம் தூண் (5th Pillar) அமைப்பின் தலைவர் திரு விஜய் ஆனந்த் பேசுகையில் - தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை இந்த ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் கோவை பிரிவை சார்ந்த திரு சேலக்கரைச்சல் .ஸ்ரீதர் - ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அதனை கூட்டத்தினர் ஒன்றாக வழிமொழிந்தனர்.
இந்த திட்டத்திற்கான வேலைகள் - மே மாதம் துவங்கியது. இறுதி பரிசளிப்பு நிகழ்ச்சிகளை - ஐந்தாம் தூண் அமைப்பின் செயல் இயக்குனர் திரு கே. பானுகுமார், தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் தலைவர் திரு எல்.எஸ். ஜெகநாதன், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் திரு சந்திர போஸ், அதன் தலைமை நிலைய செயலாளர் திரு வி.ஆர்.சந்திரன், அதன் மக்கள் தொடர்பு செயலாளர் திரு .நபீஸ் அஹமத், அதன் செயல் திட்டங்கள் செயலாளர் திரு ஜேம்ஸ் ராஜநாயகம், அலுவலக மேலாளர் திருமதி தில்சத் பேகம் ஆகியோர் திறனாக ஏற்பாடு .செய்திருந்தனர்.
நேர்மை குறித்த அக்கறை இந்நாட்டில் - குறிப்பாக அரசியலில் - மிகவும் குறைவாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் பற்றி விவரிக்கும் ஐக்கிய நாட்டு சபையின் ஓர் ஆவணத்தில் - இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, "நேர்மை என்ற சொல்லுக்கு இந்தியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை" என பதியப்பட்டிருப்பதாக கூறுவர். எவ்வளவு வெக்கப்படவேண்டிய விஷயம்!
இந்த கூட்டமைப்பானது - தமிழக சட்டமன்றத்தின் நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் காண ஒரு வழிமுறையை வடிவமைத்து, அவர்களை கவுரவிக்க முடிவுசெய்தது. நேரடி மற்றும் ஆழமான 26 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் நிரப்பி அனுப்பும்ப்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது அனுப்பப்பட்டது.
பதில் அளிக்க விரும்பாத நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என ஒத்துக்கொண்டாலும், நல்ல உறுப்பினர்கள்:ஊழல்புரியும் உறுப்பினர்கள் விகிதம் - மிகவும் வருந்தக்கூடிய அளவில் உள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அரசு சாரா அமைப்புகளின் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டியது கடமை என்று கருதி, பதில் கூறிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் கவுரவிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊழல் போக்கை தடுத்து நிறுத்த ஒரு புரட்சி அவசியம். அதன் பிறகு கலாசார மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இந்த விருது வழங்கும் திட்டம் - அந்த திசையில் ஒரு சிறு முயற்சி. இது பலரின் பாராட்டுதலையும், சிலரின் எதிர்ப்பினையும் பெற்றுள்ளது. இது நேர்மையான உறுப்பினர்களை உற்சாகபடுத்தும் என்றும், நேர்மை மற்றும் தன்னலமற்ற எண்ணத்தை பிற அரசியல்வாதிகளிடம் விதைத்திட இது உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நடப்புகள் கண்டிப்பாக - இன்றில்லாவிட்டாலும், ஓர் நாள் மாறும்.
இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பாக - கல்லூரி மாணவர்களுக்கு என ஆங்கிலத்திலும், தமிழிலும் - அரசியல் ஊழலை எதிர்க்க மாணவர்களிடம் உள்ள செயல்திட்டம் (Students Strategy in combating Political Corruption) என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள திட்டமிட்டும், நாட்டு பற்றுடனும் செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கும் எழுச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: காயல்பட்டணம்.காம்